-->

Sunday, January 1, 2012

rockstar - ராக்ஸ்டார் (ராக் இசைக்கலைஞனின் காதல் பயணம்)இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த எமக்கு அந்த இசைக்கு பின்னால் இருக்கும் இசைக்கலைஞர்களின் வலியையோ பிரபலமாவதற்காக அவர்கள் கொடுக்கும் விலையையோ எண்ணிப் பார்க்க தோன்றுவதில்லை. இது இசைக்கலைஞர்களுக்கு என்று இல்லை, பிரபலங்கள் அனைவருக்கும் பொதுவானது. நாங்களும் இவனுக்கு எங்கயோ மச்சம்யா என்பதுடனோ கிசுகிசுக்களை படித்து மறந்து போவதை போலவோ கடந்தும் போகின்றோம். 


இது ஒரு ராக் இசைக்கலைஞனின் வாழ்க்கைப்பயணம். இசைப்பயணம் என்பதை விட இசைப்போராளியின் காதல் பயணம். or vise verse . ஒரு சாதாரண இசைக்கலைஞன் எப்படி ஒரு இசை போராளியாக மாறினான், மாபெரும் ராக் இசை பிரபலமாக மாறுவதற்கு என்ன விலை கொடுத்தான், அவனது குறிக்கோளை அடைய அவன் தெரிவு செய்த வழி எவ்வாறு அவன் வாழ்க்கையையே புரட்டி போட்டது, இது தான் ராக் ஸ்டார் திரைப்படத்தின் கதை.


ஜனார்த்தன்(ஜோர்டன் என்று பின்பு அழைக்கப்படும்), ஒரு சாதாரண கல்லூரி மாணவன். jim morrison ஐ போன்று ஒரு பெரிய இசைக்கலைஞனாக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பாடகன், கிடார் இசைக்கலைஞன், மற்ற ராக் இசைக்கலைஞர்களை போல் தலைவிரி கோலமாக கோணங்கித்தனமான ஆடைகளுடன் வெறித்தனமான attitude உடன் அலைபவன் அல்ல இந்த ஜனார்த்தன். ஒரு சாமானியன். 


சிறந்த இசைக்கலைஞனுக்கு இருக்க வேண்டிய எல்லா திறமைகளும் இருந்தும் தன்னால் ஏன் ஒரு பிரபலமாக உருவாக முடியவில்லை என்ற கேள்விக்கு அவனுக்கு காதல் வலி தான் ஒரு சிறந்த கலைஞனை உருவாக்கும் என்று போதிக்கப்படுகிறது. இதற்காக இதயத்தை உடைக்கும் இயந்திரம் என்று நண்பர்களால் வர்ணிக்கப்படும் காஷ்மீரிய அழகி, அவனுடன் கூடப்படிக்கும் ஹீர் மீது காதல் கொள்ள(?) முயற்சிக்கிறான். இவளின் புறக்கணிப்பு இவனில் காதல் வலியாக மாறி இசைக்கலைஞனுக்கான அடையாளத்தை தோற்றுவிக்கும் என்று நம்புகிறான். ஹீர் அவன் காதலை ஏற்றாளா அல்லது அவன் விரும்பிய காதல் வலியை கொடுத்தாளா, இந்த விளையாட்டுத்தனமான காதல் முயற்சி எத்தகைய மாற்றங்களை அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தியது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


ராக் ஸ்டார், ரன்பீர் கபூர், நர்கிஸ், அதிதி ராவ், ஷம்மி கபூர் நடிப்பிலும் இம்தியாஸ் அலியின் இயக்கத்திலும் உருவானது. ஜோர்டன் என்ற ஜனர்தனுக்கான தெரிவாக ரன்பீர் கபூர் கனகச்சிதம். அப்பாவி ஜனார்தனாக ஹீரிடம் just like that காதலை சொல்வதாகட்டும் காதல் தோல்வியை அனுபவிப்பதாக சமோசா கேட்பதாகட்டும், வெறித்த கண்களுடன் தர்காவில் பாடுவதாகட்டும், ஜோர்டனாக அலட்சியமாக ரசிகர்களுக்கு நாடு விரலை தூக்கிக் காட்டுவதாகட்டும், காதலியை மோகிக்கும் காட்சிகளிலாகட்டும் மனிதர் அட்டகாசபடுத்துகிறார். 
உலகமே போற்றும் ஒரு மாபெரும் இசைக்கலைஞனை உருவாக்கப்போகும், கல்லூரியே உபாசிக்கும் ஒரு தேவதை எப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்கிறார் மாடல் அழகி நர்கிஸ். புகைப்படங்களில் சாதா அழகியாக கூகுளில் முக்கால் நிர்வாணத்துடனேயே இருக்கும் நர்கிஸ் இந்த பாத்திரத்துக்கு எப்படி பொருந்துவார் என்று நினைத்தவர்களுக்கு இத்திரைப்படத்தில் நர்கிசின் காஷ்மீரிய அழகி பாத்திரம், அவரின் நடிப்பு ஆனந்த அதிர்ச்சி தான். சில கோணங்களில் கத்ரீனா கைப் ஐ ஞாபகப்படுத்தினாலும் குழந்தைத்தனமான குறும்புகளிலும் உதட்டு அசைவுகளிலும் மனதை அள்ளுகிறார். 


காலம் சென்ற ஷம்மி கபூர் சில காட்சிகளில் தோன்றுகிறார். நாயகனின் negetive publicity ஐயும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அந்த கோமாளி வில்லன் சிரிக்க வைக்கிறார், சில நேரம் எரிச்சலையும் வரவழைக்கிறார். 


உண்மையில் ராக் ஸ்டார் திரைப்படத்தை பார்க்க ஆஸ்கார் நாயகனின் இசை என்ற ஒரே காரணமே என்னை தூண்டியது. பதினான்கு பாடல்கள் இத்திரைப்படத்தில் இருந்தாலும் பெரும்பான்மையான பாடல்கள் படத்தில் துருத்திக்கொண்டு தெரியாமல் சாமர்த்தியமாக காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கின்றன. இந்திய ராக் இலிருந்து கிழக்காசிய, ஹங்கேரிய இசை வரை கலந்து இசை விருந்து படைத்திருக்கிறார் இசைப்புயல். சத்தா ஹக்(Sadda Haq ), நாதான் பரிந்தே(Nadaan Parinde), ஜொஹ் பிஹி மெஹ்(Jo Bhi Main) என்பவை ராக் இசைபிரியர்களுக்கனவை. தும் ஹோ(Tum Ho) , ஆர் ஹோ(Aur Ho) என்பவை மனதை கனக்கவைக்கும். இவற்றில் எனக்கு பிரத்தியோகமாக மிகப்பிடித்தது ஆர் ஹோ(Aur Ho) மற்றும் ஜுகல்பந்தியாக  ஒலிக்கும் The Dichotomy of Fame . 
வேறொருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் காதலன் திருமண மருதாணி இட்டு விட நாயகி அவனை கட்டியணைக்கக் கோரும் காட்சியும் திருமண ஆடைகளுடன் காதலனுக்கு அழகு காட்டி விட்டு நீ என்னை காதலிக்க ஆரம்பித்து விடவில்லையே என்று கிண்டலாக நாயகன் கேட்கும்போது கண்களில் தோன்றும் ஏக்கத்தை மறைத்துக்கொண்டு இப்போதே ஓடிப்போய் விடுவோமா என்று நாயகியும் குறும்பாகவே கேட்பதும் ரசனையான காட்சிகள். 


இத்திரைப்படத்தில் சிறு குறைகளும் இல்லாமலில்லை. நான்-லிநீயராக(non-linear) திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இந்தக்கதைக்கு  பொருத்தமாக  இருந்தாலும் சிலநேரங்களில் திரைக்கதையில் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சில காட்சிகள் மறுபடி மறுபடி தொன்றுவதைப்போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றன. இடைவேளைக்கு பிறகான காட்சிகளுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 


காதலிக்காக எதையும் செய்யக்கூடியவராக அவளின் சின்னச்சின்ன ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற பாடுபடும், காதலிக்கு திருமணம் ஆகிய பிறகும் அவரை அடைய துடிக்கும் நாயகன், அவர் திருமணத்துக்கு முன்பான காட்சியில் என்னை கடத்திக்கொண்டு போய் விடு என்று காதலியே கேட்கும்போதும் அதை புறக்கணிப்பதும் ஏனோ? 

திரைப்படத்தின் போஸ்டர்கள் என்னை பெரிதாகக்கவரவில்லை. வெளி அலங்காரங்களிலேயே மயங்கிவிடும் சாதாரணனின் மனநிலையை தாண்டி நான் இன்னும் வெளி வராததும் இதற்கு காரணமாக இருக்கலாம். காதலிக்கு கல்யாணம் ஆன பின்பும் அவளை நேசிப்பதும் அடையத்துடிப்பதும் இந்திய கலாச்சாரத்திற்கு இழுக்கு என்று நினைக்கும் கலாசார காவலர்கள் இத்திரைப்படத்தை தவிர்க்கலாம். 

பிரபலமாக இருப்பதால் எதையெல்லாம் ஒருவன் இழக்க நேரிடும் என்பதையும் ஒரு கட்டத்திற்கு மேல் நாமே நினைத்தாலும் பிரபலம் என்ற போர்வையை விட்டு வெளியே வர முடியாது என்பதையும் ஜோர்டன் பாத்திரத்தின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். 


ராக் ஸ்டார் என்று பெயரிடப்பட்ட போதும் ஒரு ராக் இசைக்கலைஞனின் காதல் வாழ்க்கையுடனான காலகட்டத்தையும் அதன் மூலமான வலியையும் மட்டுமே இயக்குனர் படமாக்கியுள்ளார். இருப்பினும் ராக் ஸ்டார் காதலிப்பவர்களையும் இளைஞர்களையும் இசை ரசிகர்களையும் கவர்வான் என்பதில் ஐயமில்லை. 


காதலில் சரியென்றும் தப்பென்றும் எதுவும் இல்லை... எல்லாவற்றிற்கும் காரணம் கற்பிக்காமல் காதலை காதலாக மட்டுமே பார்க்கக்கூடிய மனோநிலை மட்டுமே இருந்தால் இத்திரைப்படத்தை பார்க்கவும்..