-->

Wednesday, August 3, 2011

வேலை தேடும் படலமும் அனிதாவின் காதல்களும்.


ஆடிக்கு ஒண்ணு அமாவாசைக்கு ஒண்ணுனு எழுதுனாலும், உருப்படியா(?) ரெண்டு மூணு பதிவு எழுதிட்டு இருந்த என்னையும் கேடுத்துட்டாங்களே (அய்யய்யோ இது அந்த 'கெடுத்து' இல்ல) இந்தப் பதிவருங்க. என்ன எழுதுனாலும் கடைல கூட்டத்த காணோம்.நானும் இப்போ வெட்டியா பதிவு போடலாம்னு இருக்கேன்(என்ன தான் ஒட்டக பால்ல டீ போட்டாலும், ருசியா - சரக்கு இருந்தா தானே கூட்டம் வருமுன்னு நீங்க சொல்றது எனக்கும் கேட்குதுங்க). 

இது நம்ம கடை இல்ல.


வேலை வெட்டி இல்லாத நேரத்துல என்ன பண்றது? நமக்கும் பொழுது போகணுமுல்ல. அதான் சும்மா பதிவுங்கர பேருல பத்து பேர் வைத்தெரிச்சல கொட்டிகிட்டா தானா போயிரும் பொழுது. அதான் இந்த ஐடியா. 

நா ஒன்னும் புதுசா வேட்டியாகுன ஆபிசர் இல்லீங்கோ. இப்போ ஒரு ஆறு மாசம் ஆகுது கொழுப்பெடுத்து போய் வேலைய விட்டு. இந்த ஆறு மாசமா வீட்ல சும்மா பழைய டிவிடி லாம் பார்த்து பார்த்து கண்ணு பூத்து போயிருச்ச்சு. என்ன பண்ணுரதுன்னே தெரியல.

யாரவது "வெட்டி பொழுதை வெற்றியாக மாற்றுவது எப்படி"ன்னு பதிவப் போட்டு நமக்கு கொஞ்சம் யோசனை சொல்லுங்க, இல்லன்னா  "சும்மா இருப்பது எப்படி"ன்னு நா ஒரு பதிவ போட்டு உங்கள எல்லாம் காண்டாக்கிருவேன்.

நான் படிச்சு முடிஞ்சு(வெறும் பள்ளிக்கூட படிப்பு மட்டும் தான்) இப்போ கிட்ட தட்ட ஏழு வருஷம் ஆகுது. ஆனா மொத்தமா ஆறு உத்தியோகம் பார்த்துட்டேன் இந்த ஏழு வருஷத்துல. சில இடங்களுல இருந்து விட்டா போதும்னு நானா ஓடி வந்துருக்கேன். சில இடத்துல அவனுங்களா மண்டைல ஒரு தட்டு தட்டி கழுத்துல கை வைச்சு வெளிய விரட்டி விட்டுருக்காங்க. இப்புடி ஒவ்வொரு வருசமும் ஆறு மாசம் வேலை ஆறு மாசம் வெட்டி னு என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. எனக்கும் வேலைக்கும் அப்புடி ஒரு ராசி. கடைசியா வேலை பாத்த இடத்துல முறுக்கி கிட்டு வெளிய வந்துட்டு இப்போ மறுபடியும் வேலை தேடும் படலம் ஆரம்பமாகிருச்சு. 


போற இடமெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா நம்மள தான் ஒரு பய புள்ளையா மதிச்சு வேலை குடுக்க மாட்டேனுறாங்க. நாம அடிக்கடி ஒவ்வொரு வேலையில இருந்தும் வேற வேலைக்கு தாவுற வேகத்த பார்த்து மெரண்டுட்டானுங்க போல. கடைசியா போன வாரம் ஒரு பிரபல ஐடி கம்பெனில நேர்முக தேர்வுக்கு கூப்புட்டாகோ... அங்க தான் ஆரம்பிச்சுது சனி. 

பயபுள்ள, நாம வெட்டியா இருக்கத சாக்கா வைச்சு அவனுங்களுக்கு பொழுது போகாதப்போ எல்லாம் நம்மள கூப்புட்டு நேர்முகத் தேர்வுன்னு இம்சை பண்ண ஆரம்பிச்சானுங்க. ஒரு என்டரன்ஸ் எக்ஸாம், ரெண்டு நேர்முக அரட்டை னு நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. 

அப்புறமா ரெண்டு பேரு எல்லாத்துலயும் ஒரே அளவு மதிப்பெண் எடுத்து இருக்குறதால வடிகட்டி கடைசியா ஒருத்தருக்கு தான் வேலை குடுக்க முடியுமுன்னு கடைசி நேர்முகத்தேர்வுன்னு கூப்புட்டானுங்க. 


நானும் நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு இவ்வளவு தூரம் கூப்புடுறாங்கலேன்னு கெளம்பி போனேன். எங்க ஆத்தாவும் "சென்று வா மனோகரா, வென்று வா" ன்னு வீரத்திலகம் லாம் பூசி அனுப்பிச்சு. 

அங்க போனா புள்ள புடிக்கிங்கலாட்டம் ரெண்டு பேர் உட்கார்ந்து இருக்கானுங்க நம்மள பேட்டி எடுக்க, மன்னிக்கணும் தேர்வு செய்ய. ஒரு கேள்விய கேட்டு அதுக்கு பதில் சொன்னா இது பத்தாது இன்னும் உங்க கிட்ட எதிர் பார்க்கறேன் டீடைல்லுன்னு சொல்லுறானுங்க. நல்லா கேட்குறாங்கையா டீடைல்லுன்னு நாம நீட்டி மொழங்கி பதில் சொன்னா ஆமா , இல்லை இப்புடி சொன்னா போதும்னு அலுத்துக்குறாங்க கொட்டாவி விட்டுக்குட்டே. 

கிட்ட தட்ட ஒரு மணி நேரம். சுத்தி சுத்தி கேவி கேட்டு அவனுங்களே டயர்டு ஆகிட்டானுங்கனா பதில் சொன்ன நம்ம நெலமை எப்புடி ஆகிருக்கும்? போங்கடா வெண்ணைங்களான்னு ஓடியே வந்துட்டேன்.  அனிதாவின் காதல்களும் சுஜாதாவும்சும்மா இருக்கிற நேரத்துல சில மின்னூல்கள பதிவிறக்கம் செஞ்சு வாசிக்கற பழக்கம் வந்துருக்கு இப்போ(காசு குடுத்து புத்தகம் வாங்குற அளவுக்கு வசதியில்லீங்கோ). அப்போ தான் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் அனிதாவின் காதல்கள் புத்தகம் கிடைச்சுது. 

இதுக்கு முன்னாடியே இந்த நாவலை ஒரு வாராந்த சஞ்சிகையில் வாசிச்சு இருந்தாலும் சில அத்தியாயங்கள தவற விட்ட காரணத்தால், சுஜாதாவின் பரம விசிறி என்பதாலும் மறுபடி பதிவிறக்கம் செய்ஞ்சு வாசிச்சேன். 

வாசிச்சு முடிச்சப்போ இந்த மாதிரி ஒரு எழுத்தாளர நாம இழந்துட்டோமேன்னு அவ்வளவு வருத்தமா இருந்துச்சு. என்னமா எழுதியிருக்காருய்யா இந்த மனுஷன். மனசுக்கு பிடிக்காத திருமணமானாலும் கடைசியில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு முடிவெடுக்கற சராசரி தமிழ்ப்பெண்ணை பற்றிய கதைன்னாலும் அதை எழுதுன விதம் அபாரம். 

எந்த ஒரு தெளிவான முடிவையும் எடுக்க முடியாமல் பிறரைச் சார்ந்தே இருந்து அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தடுமாறும் கதா நாயகி அனிதா, இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும், காதல் உள்பட பணத்தால் வாங்கி விட முடியும் என்ற திமிருடன் மிகபெரும் பணக்கார கதாநாயகன் வைரு என்கிற வைரவன், எட்டு வருடமாக ஒரு பெண்ணை மனதிலேயே காதலித்து அவளுக்கு வேறொருவருடன் திருமணம் ஆனபின்பும் காதலிக்கும், அவளுக்கு முதல் கணவனுடன் குழந்தை பிறந்தால் கூட காதலியின் குழந்தையாக ஏற்றுக்கொண்டு அதற்கு நர்சரியில் அட்மிஷன் வாங்க ஏற்பாடு செய்யும் சீதாராமன், குதூகலமான கூடவே சுயநலம் நிரம்பிய நண்பி மது, நடுத்தர குடும்பத்து பிராமிண் பெற்றோர், இவர்களைச்சுற்றி சுழலும் கதை.ஒரு பெண்ணின் திருமணத்துக்காக அவளின் குடும்பம் குதூகலமாக தயாராகும் விதம், ஒரு குழப்ப மனநிலை பெண், அவளின் ஆசைகள்,தடுமாற்றங்கள், அவள் எதையும் முடிவு செய்யாமலே அவளை கடந்து போகும் விதி, மதிப்பான பெரும் பணக்கார வீட்டு பெண்மணியின் வாயில் வீசும் விஸ்கி வாசம், பணமும் பவிசும் இருக்கும் வரை கூழைக்கும்பிடு போடும், அது இல்லையெனும்போது ஒரே நொடியில் கழுத்தைப்பிடிக்கும் காவல் துறை, காதல் மனசு சம்பந்தப்பட்டது என்று எம்மை கண்கலங்கி ஒத்துக்கொள்ள வைக்கும் சீதா, தம் வருங்கால வசதிகளை பெருக்குவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு அதற்கான வாய்ப்பு வரும்போது அதை நேக்காக பயன் படுத்திக்கொள்ளும் குடும்பம் என்று பல சுவாரசியங்கள் இந்த நாவலில். 

பிராமண குலத்தில் பிறந்தும் அவர்களைப்பற்றியே கிண்டல் அடித்து எழுதும் தைரியம் நிறைய பேருக்கு வராது. அதிலும் முக்கியமா "ஒரு லெவலுக்கு மேல பணமிருந்தா ஜாதிங்கறதுக்கு அர்த்தமேயில்லாம போயிரும்" என்ற வரி, சாதிக்கும் பணத்துக்கும் இடையிலான தொடர்பை பட்டென்று போட்டிலடித்தாட் போல் சொல்லியிருப்பார். 


என்ன தான் கதையில் கதாநாயகிக்கு தெளிவை கொண்டுவருபவராய் வந்தாலும் சாமியாரிணி ஆனந்தா பாத்திரம் அனாவசிய திணிப்பாக தனித்து தெரிகிறது. அனிதாவின் காதல்கள் என்று பெயர் வைத்து விட்டதாலேயே அவருக்கு நாலைந்து காதல்களையாவது(அனிதா அவர்களில் ஒருவரையுமே கடைசிவரை காதலிக்கவில்லை என்பது வேறு விடயம்) காட்டிவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் மல்லிகா மற்றும் அவரது அண்ணனான விசுவையும் கதையில் புகுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. மேலும் அவர்கள் கதையின் ட்விஸ்ட்டிற்கோ சுவாரசியத்திற்கோ எங்குமே உதவவில்லை என்பதால் அவர்களை தவிர்த்திருந்தால் கூட கதை நன்றாகவே அமைந்திருக்கக் கூடும்.


கொஞ்சம் பிசகியிருந்தாலும் ரமணிச்சந்திரனின் மென்காதல் கதைகளின் சாயல் வந்திருக்கும். ஆனாலும் தனது சுவாரசியமான எழுத்து நடையாலும் வேகமான சம்பவக்கோர்வைகளாலும் எம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறார் எழுத்தாளர் சுஜாதா. ஒரு பெரிய எழுத்தாளரின் நாவலை விமரிசிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லாவிட்டாலும் கூட இந்த நாவலைப்பற்றிய என் கருத்தை பகிரவே இங்கு பதிவிடுகின்றேன். 

அனிதாவின் காதல்கள், ஒரு அழகான திரைப்படம் பார்த்த திருப்தி கடைசியில். 

3 comments:

 1. நானும் வேலைய விட்டு முறுக்கிட்டு வந்து வெட்டியா இருக்கும்போதுதான் பதிவுலகம் வந்தேன். நம்மள மாதிரியே நாட்டில நிறையப்பேரு இருக்காங்க போல!
  என்றைக்கும் சுஜாதா நம்ம தல!
  இரத்தப்படலம் பற்றி எனது பதிவில் கேட்டிருந்தீர்கள்!
  இரத்தப்படலம் கிடைத்துவிட்டது!அதுபற்றி இந்தப்பதிவில் விரிவாக!
  http://umajee.blogspot.com/2011/09/blog-post_16.html

  ReplyDelete
 2. Comment word verification நீக்குங்கள்!
  திரட்டிகளில் இணையுங்கள்!
  கலக்குங்க brother! :-)

  ReplyDelete
 3. nandri Jee.. ungaludhu dhaan 1st comment nu nenaikkaren.. nandri.. I'm much into reading rather than writing... Though I dun comment on ur posts, I read them... Sowi naa konjam somberi adhaan comment poduradhu illa.. vaazhtthukkal....thodarattum ungal ezhutthuppani...

  ReplyDelete