-->

Wednesday, June 15, 2011

என்னை பாதித்த வெள்ளித்திரை இயக்குனர்கள் - Part 2ஒரு சிறந்த திரைப்படத்தை படைக்க, 100 படங்களில் உதவி இயக்குனராகவோ சிறந்த ஒரு இயக்குனரின் உதவியாளராகவோ இன்னும் 10 படங்களை தானே இயக்கி பாடம் கற்றுக்கொண்ட அனுபவ சாலியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் முயற்சியிலேயே முத்தான திரைப்படங்களை கொடுத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்றைய காலத்தில் யாரையுமே குறைத்து மதிப்பிட முடியாது.அறிமுக இயக்குனர்கள் கூட பெரிய நடிகர்கள் , தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமலேயே கதையை மட்டும் நம்பி பெரிய இயக்குனர்களே தொடப் பயப்படும் விடயங்களைப்பற்றி அவர்களே சிலாகித்துப்பாராட்டும் வகையில் மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார்கள்.  இவர்களில் சமுத்திரகனி , சசிகுமார் , வெற்றிமாறன்,சசி, ராதா மோகன், விஜய் , எ. சற்குணம், சுசீந்திரன், மிஷ்கின், பாண்டிராஜ், அறிவழகன், S.P.ஜனநாதன், (வேதம்-வானம்) கிருஷ் ஆகியவர்களை குரிப்பிட்டுசொல்ள்ளலாம்.


கிருஷ் (Krish Jagarlamudi)


புதிய இயக்குனர்கள் மத்தியில் commercial திரைப்படத்தின் வாயிலாக நல்ல கருத்துக்களையும் சொல்லமுடியும் என்று நிரூபித்த ஒரு இயக்குனர் தான் கிருஷ். மனிதர்களின் ஆசைகள் பலவகைப்பட்டது. மனித மனம் ஆசைகளுக்கு அடிமையாகும்போது எத்தகைய கொடூரத்தையும் செய்ய அச்சப்படுவதே இல்லை. இதனால் மனிதத்தை தொலைத்து விட்டு மிருகமாக திரிபவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர். இத்தகைய மனிதர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படம்பிடித்திருப்பது மட்டுமல்லாது, அவர்கள் எப்படியான ஒரு தருணத்தில் மனம் திருந்தி மறுபடி மனிதனாக மாறுகின்றார்கள் என்பதை உணர்ச்சிகரமான காட்டியுள்ள திரைப்படமே "வானம்".Krish Jagarlamudi

மனிதத்தைப்பற்றிய ஒரு அருமையான திரைப்படம் அதுவும் கலைத் திரைபடங்களைப்போல் பாடம் எடுத்து அலுக்க வைக்காமல் இன்றைய இளைஞர்கள் விரும்பும்வகையில் ஆடல் பாடல் அனைத்தும் அடங்கிய ஒரு commercial குருமாவாக. 

அதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரின் நடிப்பும் அவர்களின் பாத்திர வார்ப்பும் அதே போல் சிறப்பாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக சிம்புவின் கதாபாத்திரம். படித்த இளைஞனாக இருந்த போதும் காதலுக்காக , காதலிக்காக , தெருவில் பெண்களின் கழுத்து சங்கிலியை அறுப்பது கூட தவறு இல்லை என்று திருடப்புறப்படும் சிம்பு, மகனின் படிப்புக்காக தன் சிறுநீரகத்தை விற்று பணம் வாங்கும் பெண்ணிடமிருந்து பணத்தைப் பிடுங்கும்போதும் ஒரு கணப் பொழுது அந்த குடும்பத்தின் ஓலம் மறுபடி காதில் ஒழிக்க மனம்திருந்தி அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் நேரத்திலும் வெளிப்படுத்தும் நடிப்பு அபாரம். இவ்வளவு நடிப்புத்திறனை வைத்துக்கொண்டு விரல் வித்தையை மட்டும் வைத்து இவ்வளவு நாளும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியதும் ஏனோ? 

அதிகமான பாத்திர முக்கியத்துவமோ காட்சிகளோ அதிகம் இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு கிடைத்த இடத்திலெல்லாம் வெளுத்துக்கட்டியிருக்கும் அனுஷ்கா. இந்த கதா பாத்திரத்திற்கு அனுஷ்
வானம் 
கா மிகச்சிறந்த தேர்வு. அருமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒட்டகச்சிவிங்கி போல் பாடல் காட்சிகளிலெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைத்தும் கதா நாயகனுக்கு நடனமாட மட்டும் துணையாக நிற்க வைக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரு முன்னணி நடிகையை எந்த அளவுக்கு ஒரு கதா பாத்திரமாக வாழ வைக்கலாம் என்ற கலை க்ரிஷிற்கு தெளிவாக தெரிந்து இருக்கிறது. 

விலை மாதாக வாழும் ஒரு பெண்ணாக இருந்தாலும் உலகின் மிகச்சிறந்த குணங்களெல்லாம் ஒருங்கே கொண்டு திருந்தி வாழ ஒரு வாய்ப்பை மட்டும் எதிர் பார்த்து (அதுவும் கதா நாயகன் மூலமாக) காத்திருக்கும் பெண்களாக அல்லது பிறரை வைத்து தொழில் நடத்தும் கொடூரமான பெண்ணாக மட்டுமே தமிழ் சினிமாவில் இது வரை விலை மாது பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் வானத்தில் ஒரு வித்தியாசமான விலை மாது பாத்திரப் படைப்பு. உடலை விற்பது கூட ஒரு தொழில் தான் என்று மனதார ஏற்றுக்கொண்டு அதனை இழிவாக எண்ணாது செய்யும் ஒரு பெண், ஒருவன் திருமணம் செய்து குடும்ப வாழ்வுக்கு வழி காட்ட நினைக்கும்போதும் அதைத் துச்சமாக கருதி உதறி விட்டு, உடலை விற்பதாயினும் அதை சொந்த companyயின் மூலம் செய்ய நினைக்கும் ஒரு பெண். லஞ்சம் வாங்கும் காவலதிகாரியிடம் "நாங்க dress அ அவுத்துட்டு விலை போறோம். நீங்க dress அ மாட்டிக்கிட்டு விலை போறீங்க. உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்?" என்று பொங்கும்போதும் தனது நண்பியான கற்பூரத்திற்கு மருத்துவ சிகிச்சை செய்ய மறுக்கும் மருத்துவரிடம் அதற்காக அவரிடம் எத்தனை தடவை வேண்டுமானாலும் படுப்பதாக கெஞ்சும்போதும் எமது கண்களில் கண்ணீரை வரவைக்கிறார். இவரை இதற்கு பின்பாவது நடிப்பை வெளிப்படுத்தும் கதா பாத்திரங்களில் பார்க்க ஆசை. 

தெலுங்கில் கிருஷ் இயக்கிய வேதம் என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கமான வானம் நிறைய தமிழ் ரசிகர்களின் உணர்வுகளை தூண்டி இருக்கிறது. தெலுங்கு தேசத்தவராயினும் தமிழ் நாட்டிற்கு ஒரு சிறந்த பரிசாக கிடைத்திருக்கிறார் கிருஷ். முதல் படத்திலேயே தன் திறமையை சரிவர நிரூபித்து இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் வருங்காலத்தில் மென்மேலும் கூடுமே தவிர குறையாது. அதனால் சிறந்த திரைப்படங்களை என்றுமே வரவேற்கும் ரசிகர்களை ஏமாற்றாது இனிமேலும் சிறந்த திரைப்படங்களை இயக்க எங்களின் வாழ்த்துக்கள். 


தொடர்ந்து எழுதுவேன்... 


1 comment:

  1. //மனித மனம் ஆசைகளுக்கு அடிமையாகும்போது எத்தகைய கொடூரத்தையும் செய்ய அச்சப்படுவதே இல்லை. இதனால் மனிதத்தை தொலைத்து விட்டு மிருகமாக திரிபவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர்//

    உங்கள் எழுத்து ரசிக்கும்படியா இருக்கு! நீங்கள் ஏன் திரட்டிகளில் இணைப்பதில்லை? Vote buttons add பண்ணுங்க!
    இரத்தப்படலம் பற்றி கேட்டிருந்தீர்கள். கொழும்பில் தேடினால் கிடைக்கலாம்! அதுபற்றி பேச விரும்பினால் mail இல் தொடர்பு கொள்ளுங்க பாஸ்!

    ReplyDelete