-->

Tuesday, June 14, 2011

என்னை பாதித்த வெள்ளித்திரை இயக்குனர்கள் - Part 1


ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாகின்றது? நடிகர்களின் திறமையான நடிப்பும் இயக்குனரின் வழிகாட்டலுடன் கூடிய பாத்திரச் செதுக்கலும், திரைக்கதை, பாடலாசிரியர்களின் கற்பனை வளமும், இசையமைப்பாளரின் தனித்துவமான பங்களிப்பும், தயாரிப்பாளர் , விநியோகஸ்தர்கள், மூலதனம் இடும் முதலாளிகள், தணிக்கைக்குழு, படத்தை வெட்டி ஓட்டும் தையல்காரர்கள்(Editors), முகத்திற்கு மட்டுமன்றி படத்திற்கே முலாமிடும் ஒப்பனைக்கலைஞர்கள், நிழலை நிஜமாகக்காட்ட உதவும் தொழில் நுட்பக்கலைஞர்கள் , சண்டைப்பயிற்சி வல்லுனர்கள் மட்டுமன்றி இன்னும் எத்தனையோ தொழிலாளர்களின் கடின உழைப்புடன் உருவாக்கப்படுகின்றது. சினிமா சுவரொட்டி ஓட்டும் சிறுவன் கூட ஒருவகையில் தன பங்களிப்பை செய்கின்றான். 

மூன்று மணித்தியால திரைப்படத்திற்கு மூன்று வருடங்களைக்கூட செலவழித்து திரைப்படங்களை தயாரிக்கின்றார்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டது போல இது கனவுகளை நிஜத்தில் உயிர் கொடுத்து நடமாடவிடும் கனவுத்தொழிற்சாலை தான் சினிமா. ஒரு படம் வெற்றி பெரும் போது அதற்காக பாடுபட்ட அத்தனைபேரையும் நினைவு கூறும் நாம் தோல்வியுறும்போது அதற்கான முழுக்காரணமாக அத்திரைப்படத்தின் முன்னணி நடிகரையோஅல்லது இயக்குனரையோ சுட்டிக்காட்டி விட்டு மறந்து போகின்றோம். 

இது சரியா, பிழையா என்று ஆராய்ச்சி செய்வதை விட ஒரு திரைப்படத்தில் இந்த இயக்குனரின் பங்கு என்ன என்று பார்ப்போம். ஒரு சிலை வடிக்க ஒரு சிற்பி எத்தகைய பங்கு ஆற்றுகின்றானோ அதுவே ஒரு திரைப்படத்தில் இயக்குனரின் பங்காகும். எழுபதுகளில் சினிமாவில் இயக்குனர்கள் கொடிகட்டிப்பறந்தனர். இயக்குனர் சிகரம் பாரதிராஜாவால் அறிமுகம் ஆகுவதற்காக நடிகர்களும் நடிகர்களும் முண்டியடித்த காலம் அது. இயக்குனர் இமயம் பாலச்சந்தர் அவர்களின் மோதிரக்கையினால் குட்டுப்பட வரிசையில் நின்ற காலம் அது. திரைப்படங்களின் ஆணி வேரான இயக்குனர்களை நம்பி திரைப்படங்கள் வெளி வந்த காலம் அது. ஆனால் இன்று?முன்னணி கதா நாயகர்களை ஒப்பந்தம் செய்ய பணப்பெட்டியுடன் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களின் வீட்டு வாசலில் காத்து நிற்கும் அவலம். ஆந்திராவிலிருந்தும் மும்பாயிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் நடிகைகளுக்கும் அவர்களின் தாய்க்குலங்களுக்கும் மட்டுமன்றி அவர்களின் செல்ல நாய்க்குட்டிகளுக்கும் கூட உதவி இயக்குனர்கள் குடை பிடித்து பணிவிடை செய்யும் கொடுமை எல்லாம் கூட இன்று நடக்கிறது. கதைக்காக நடிகர்களை தெரிவு செய்தது போக நடிகர்களுக்காக கதை எழுதப்படுகிறது. அவர்களுக்காக கதையும் இயக்குனர்களும்கூட மாற்றப்படுகின்றனர். 

இன்று நடிகர்களுக்காக படம் பார்க்கும் கூட்டம் தான் திரையரங்குகளில் நிறைந்து இருக்கின்றது. தனக்கு பிடித்தமான நடிகரை தலைவராக எண்ணி பாலாபிஷேகம் செய்வதும் பட்டாசு வெடிப்பதும், அவர்களுக்காக உயிர் மாய்த்துக்கொள்வதும் கூட நடக்கிறது. அவர்களை விட இந்த (மூட) ரசிகர்களை குறிவைத்து சின்னத்திரை அலைவரிசைகள் கூட தங்கள் கல்லாப் பெட்டிகளை நிரப்பிக்கொள்வது வேதனைக்குரிய விடயம். இலங்கையில் அண்மையில் ஒரு தமிழ் தொலைகாட்சி SMS மூலமான வாக்கெடுப்பிற்காக கடந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தெரிவுகளில் மதராசப்பட்டினம் ஆர்யாவை புறக்கணித்து விட்டு "சுறா" என்னும் உலகப்புகழ் பெற்ற திரைக்காவியத்துக்காக அத்திரைப்படத்தின் கதா நாயகனை இணைத்து SMS மூலமாக வாக்களிக்குமாறு பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை கூவிக்கூவி விளம்பரம் செய்கிறது. ("சிறந்த" என்பதற்கும் "பிடித்தமான" என்பதற்கும் வித்தியாசம் தெரியாத இதே தொலைகாட்சி கடந்த வருடம் வேட்டைக்காரனுக்காக அதே நடிகருக்கு விருது கொடுத்து கௌரவித்தது வேறு விடயம்). 

நான் ஒன்றும் commercial சினிமாவிற்கு எதிரியல்ல. தமிழ் சினிமாவில் என்னைப்பாதித்த திரைப்படங்கள் நிறையவே உள்ளன. அதில் commercial சினிமாக்களும் உள்ளடக்கம். ஒரு திரைப்படத்தை பார்த்து முடிக்கும்போது அந்த திரைப்படத்தை பார்க்க முன்பான மனோநிலையை அத்திரைப்படம் சிறிதாவது மாற்றியிருக்க வேண்டும். அதாவது பார்வையாளனின் மனதில் அத்திரைப்படம் மன அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும் இல்லையெனில் அதை ஒரு சிறந்த படமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் ஒரு சில குறிப்பிட்ட இயக்குனர்களின் திரைப்படங்கள் நிறையவே என்னை பாதித்திருக்கின்றன. 


இயக்குனர் மகேந்திரன் (Director Mahendran)


Director Mahendran with Rajini Kanth in Mullum Malarum shooting set.


தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மகேந்திரனின் "உதிரிப்பூக்கள்" திரைப்படம் அவ்வாறான ஒரு திரைப்படம்.  சிக்குப்படிந்த முடியுடனும் சந்திரமுகியின் சகோதரனைப்போல் கண்ணை உருட்டிக்கொண்டு ஆ.. ஊ.. என்று படத்தின் முடிவுவரை கத்திக்கொண்டே இருக்கும் ஆந்திர வில்லன்களும்(வில்லிகளும்) கவனிக்க. அந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது வில்லனாக நடித்த விஜயனின் நடிப்பு. அமைதியாக இருந்து கொண்டே ஒருவர் எப்படி ஒரு கிராமத்தையே கெடுக்க முடியும் என்பதற்கு அவரின் நடிப்பும் பாத்திர வார்ப்பும் ஒரு எடுத்துக்காட்டு. கொடுமையான மனவக்கிரம் பிடித்த ஒரு பெரிய மனிதனுக்கு அடிக்காமல் வலிக்க வைக்காமல் இரத்த களரியான வன்முறையின்றி எப்படி பாடம் புகட்டுவது என்பதை இறுதிக்காட்சியின் மூலம் இயக்குனர் மகேந்திரன் அருமையாக உணர்த்தியுள்ளார். இத்திரைப்படம் இன்றும் பல புதிய இயக்குனர்களுக்கு ஒரு சிறந்த திரைப்படத்திற்கான முன்னுதாரணமாக விளங்குகிறது. 

உதிரி பூக்கள் 
உதிரி பூக்கள்


ரஜினியை வைத்து இயக்கிய முள்ளும் மலரும் இன்னொரு ஒப்பற்ற திரைப்படம். செம்மண் காட்டு கிராமங்களையும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு விரையும் ஜீப் வண்டிப் பிரயாணங்களையும் அழுத்தமான காட்சியமைப்புகளோடு கோர்த்து காட்டுவதில் இவர் வல்லவர். ஒரு கையை இழந்த பின்பு தன் இயலாமையை குறைவாக மதிப்பிட்டு தன்னை மதிக்காமல் தன் தங்கையை தன்னுடைய எதிரிக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ, அதை தடுக்கும் சக்தியற்றவனாக மற்றவர்கள் தன்னை கருதி விடுவார்களோ என்ற பயத்துடன் வீண் ஜம்பம் பேசி திரியும் வித்தியாச ரஜினி. அவர் ஊனமாகிப்போன பரிதாபத்தை விட எதற்காக இப்படி தன் வெட்டி கௌரவத்திற்காக தங்கைக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கையை கெடுக்கிறார் என்று ரஜினி மேலேயே எங்களுக்கு எரிச்சலை வரவழைப்பதில் தான் இயக்குனர் மகேந்திரனின் திறமை ஓங்கி நிற்கிறது. 

முள்ளும் மலரும் - ஷோபா


இவரால் இயக்கப்பட்ட ஒரு commercial திரைப்படம் தான் "ஜானி". நான் அதிக தடவை பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. பிராணிகளுடன் ஒன்றாக படுக்கையில் படுத்திருப்பதும், தோட்டத்தில் மலர்ந்துள்ள பூக்களைக்கூட எண்ணி வைத்து விட்டுப் போகும் மகா கஞ்சனாக ரஜினி. ரஜினியால் நடிக்க முடியாத பாத்திரங்களே இல்லை என்று உணர்த்தியதில் ரஜினியை விட இயக்குனர் மகேந்திரனின் பங்கே அதிகமானது. 

இவரின் மற்ற திரைப்படங்களை பார்க்கும் பாக்கியம் இன்னும் எனக்கு வைக்கவே இல்லை.

தொடர்ந்து எழுதுவேன்... 

No comments:

Post a Comment