-->

Friday, May 6, 2011

கதிர்காமம் நோக்கி ஒரு பயணம் - A Visit To kathirkamam: Part 1

Badulla to kathirkamam(Kataragama)





எனக்கு சிறுவயதில் இருந்தே பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கிறது. ஆனால் நான் குறிப்பிடும்படியாக எங்கும் பிரயாணித்தது இல்லை அது தவிர எழுத அவகாசமும் கிடைத்ததில்லை. பெரிய எழுத்தாளர்கள் மட்டுமே பயணக்கட்டுரைகள் எழுதி வந்த அந்தக்காலத்தில் "ராணி" வாராந்த சஞ்சிகை வாசகர் அனுபவங்களையும் பிரசுரித்து எழுத திறமையும் ஆர்வமும் மட்டுமே போதும் என்று என்னை ஊக்குவித்தது.

இங்கு நான் பிரசுரித்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் எனது கைத்தொலைபேசி(Nokia 6300- 2Mega Pixel) மூலம் எடுக்கப்பட்டவை. தெளிவு குறைவென்றாலும் எடுத்துக்கொண்ட பொருளை தெளிவாக எடுத்துக்காட்டும் என்ற நம்பிக்கையிலேயே பிரசுரிக்கின்றேன். 

கதிர்காமம் இலங்கையின் பிரசித்தி பெற்ற திருத்தலம். முருகனுக்காக கட்டப்பட்ட கோயிலேன்றாலும் அனைத்து மதக்கோயில்களும் ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் எல்லா மதத்தினரும் வருகை தந்து சர்வ மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றது.   


இலங்கை மக்களின் புனித தலமாக விளங்குவதால் வருடத்திற்கொருமுறை இங்கு தலயாத்திரை மேற்கொள்ளுவதே வழமையாக இருக்கின்றது.  தொழில் சிறக்கவும் வெளிநாட்டுப்பயணம் சரிவரவும் வியாதி குணமாகவும் கதிர்காம கந்தனுக்கு நேர்த்தி வைத்து தமது கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதையே தலையாய கடமையாகக்கொண்டு தவறாமல் இங்கு பிரயாணிப்பர்கள் (இல்லையென்றால் சாமி கண்ணைக்குத்தி விடும் என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்) 


கடந்த வருடம் என்னை மட்டும் விட்டு விட்டு என் குடும்பமும் உறவினர்களும் கதிர்காமம் சென்றதை காரணம் காட்டியே இந்த முறை சித்திரை வருடப்பிறப்பு காலத்தில் கதிர்காமம் சென்றே ஆகவேண்டும் என்று நான் ஒற்றைக் காலில் நின்றதால் எல்லோரும் எனது சொந்த ஊரான பதுள்ளைக்கு சென்று அங்கிருந்து கதிர்காமம் செல்ல வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.


எங்களுக்கு கதிர்காமக்கந்தனை தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை விட குடும்பமாக கூடி எங்கேயாவது சுற்றுலா செல்லும் ஆர்வமே மேலோங்கி நின்றது. ஆனால் சுற்றுலா செல்வது என்பது எங்கள் பாட்டிக்கு மறுபடி முடி முளைத்து மொட்டை போடும் காலத்தில் தான் என்பதால் தலையாத்திரையையே சுற்றுலாவாக நினைத்துக்கொண்டு பிரயாணத்துக்கு ஆயத்தங்கள் செய்தோம்.


கதிர்காமத்தின் புனிதத் தீர்த்தமான மாணிக்க கங்கையின் தற்போதைய நிலை மற்றும் "சுகாதாரம்" பற்றி முன்கூட்டியே எனக்கு அறிவுறுத்தப்பட்டதால் மற்றவர்கள் கங்கையில் குளிக்க, நான் மட்டும் வீட்டிலேயே குளித்து விட்டு புறப்படுவதேன்று முடிவு செய்து அதிகாலையில் கடுங்குளிரில் குளிர்நீரோடு போராடி குளித்து நடுங்கும்போது, "தாயை பழித்தாலும் கங்கையை பழிக்கக் கூடாதம்மா" என்ற என் பாட்டியின் வியாக்கியானம் வேறு எனக்கு எரிச்சலை மூட்டியது. 






ஒருவாறு பிரயாணத்தை ஆரம்பித்தபோது காலை மணி 6. பதுள்ள, புத்தள தாண்டி எங்கள் பிரயாணம் ருஹுனு விலங்கியல் பாதுகாப்பு மைய நெடுஞ்சாலை வழியாக பிரயாணித்தது. 

வழியில் எம்மை வரவேற்க நிறைய எதிர்பாராத விருந்தாளிகள்/ வரவேட்பாளர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் யார் என்பதை பாகம் 2 இல் பார்க்கலாம். 

தொடரும் பயணம்... 

No comments:

Post a Comment