-->

Wednesday, May 11, 2011

என் கனவுகளும் பாம்புகளும் - My Dreams and Snakes


கனவுகள், சிலருக்கு மனதுக்கு சிறகு கட்டிக்கொடுக்கும் நிகழ்வாக அமைகின்றது.  சிலருக்கோ கல்லைக்கட்டி பாழுங்கிணற்றில் தள்ளி விடும் அனுபவமாக அது தினம் தினம் அமைகின்றது . கனவுகளைப்பற்றி பலர் ஆய்வுகள் செய்திருக்கின்றார்கள். உள்மனது ஆசைகள் மற்றும் ஏக்கங்களை எடுத்துக்காட்டி அதற்கு வடிகாலாக அமைவதே கனவுகள் என்ற பரவலான கருத்து நிலவி வருகின்றது.

கனவுகள் பலவகைப்படும். கனவிலாவது நாம் நினைத்தவை நடக்கின்றது என்று இயல்பு வாழ்க்கையிலும் கனவில் மூழ்கத்துடிப்பவர் பலர். தினம் தினம் கனவில் வந்து பயமுறுத்தும் சிறு வயதில் பார்த்த சினிமாவில் வந்த பேய்கள்  அல்லது மனைவி கனவில் வருவாளென்று கூட தூங்க மறுப்பவர்கள் சிலர். எனக்கு? 

எந்த வயதில் இருந்து எனக்கு கனவுகள் தோன்றியது என்பதோ எந்த வயதில் அதைக் கனவுகளாக என்னால் பிரித்தறிய முடிந்தது என்பது எனக்கு ஞாபகமில்லை. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த வரை நான் ஆரம்ப காலம் முதல் என் கனவுகளுக்கு பயந்தே இருந்திருக்கின்றேன். சிலருக்கு சில போபியாக்கள் இருக்கும், 'தெனாலி' திரைப்படத்தில் கமலஹாசனின் எதைப்பார்த்தாலும் பயப்படும் போபியா போல. எனக்கு சிக்கிக்கிடக்கும் நூல் அல்லது கயிறு, முடிவில்லாத நிலை(infinity), குழம்பிக்கிடக்கும் வர்ணச்சிதரல்கள் என்பவற்றைக் காணும்போது ஒரு வித போப்ஹியா(phobia) தோன்றுவது இயல்பு. என் முதல் கனவாக எனக்கு இன்னும் ஞாபகமிருப்பது எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது எனக்கு வந்த கனவு. ஒரு முட்டை உடைந்து அதனுள்ளிருந்து முடிவில்லாத குழம்பிய நூல் துண்டுகள் என்னைச்சுற்றி துரத்தும் காட்சி. இதனைத்தொடர்ந்து நான் தூக்கத்தில் அலறியதும் படுக்கையை நனைத்ததும் இன்னும் மறக்கவில்லை. 

அம்மா எனக்கு திருநீறு இட்டு, பின் என் கனவைப் பற்றி விசாரித்தபோது எனக்கு அதை அந்த வயதில் விபரிக்க முடியவில்லை. சொல்லியிருந்தாலும் அதை போருட்படுத்தியிருப்பர்களா என்று தெரியவில்லை. அதன் பின்பு அதே கனவு எனக்கு பலமுறை தோன்றியிருக்கிறது. அந்த நூல் துண்டுகள் விதம் விதமான வடிவெடுத்து என்னை துரத்திய பின் தான், இது எனக்கு ஒரு போபியாவாக தோன்றக் காரணமாக இருந்திருக்கக்கூடும். 

அதன் பின்பாக பெண்களுக்கே உரிய தேவதைக்கனவுகள் எனக்கும் தோன்றியிருக்கிறது. அனால் ஒவ்வொரு தேவதைக்கனவிலும் நான் தேவதையாக மாறியபோதும், இறுதியில் பள்ளத்தாக்கில் கண்ணாடிச்சில்லுகளைப்போல் உடல் சிதரிக்கிடப்பதோடு கனவு முடிகின்றது. இதனாலேயே எனக்கு தேவதைகளையும் அவர்களைப்பற்றிய கனவுகளையும் பிடிக்காமல் போனது. 


அதன் பின்பாக எனக்கு என் கனவில் பாம்புகள் தோன்ற, துரத்த ஆரம்பித்தன. பாம்புகள் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் தோன்றின. அவை மனித தலைகளுடனும் பாம்பு உடலுடனும் சில வேளைகளில் கொடூரமான உருவத்துடனும் என் கனவில் உலவி வருகின்றது இன்று வரை. 

எனக்கு பாம்புகள் என்றாலே ஒரு நடுக்கம் தான். ஊட்டியின் அழகு, சீதோஷ்ண நிலை பற்றி கேள்விப்பட்டு அங்கே தான் எனது இறுதி வாழ் நாளைக் கழிக்க வேண்டும் என்று முடிவெடுத்த போது கூட என் மனதில் எழுந்த முதல் கேள்வி அங்கே பாம்புகள் இருக்கின்றதா என்பது தான். 

பாம்புகள் தொடர்ச்சியாக கனவில் தோன்றியபோது அதைப்பற்றி சிறிது விபரங்கள் அறிய முயற்சி செய்தேன். பாம்புக்கனவுகளுக்கான அர்த்தமாக இறப்பு மற்றும் உயிர்ப்பும் மற்றொரு மிகப்பெரிய காரணமாக காம உணர்ச்சிகளுமே அமைந்திருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

மனோவியல் ரீதியாக பார்க்கும்போது காமத்தை பிரதிபலிப்பதாக ஆண்களின் பிறப்புறுப்பை சங்கேதமாக குறிக்கும் பொருட்களான பாம்புகள், நீண்ட குழாய்கள், தடிகள் என்பவை பெண்களின் கனவிலும், பெண்களின் மார்பகங்களைக் குறிக்கும் பொருட்களான பந்து, ஆப்பிள், மற்றும் உருண்டையான பொருட்கள் ஆண்களின் கனவிலும் தோன்றுவதாக மனோவியலாளர்கள் கூறுகின்றார்கள். காம உணர்ச்சிகள் தான் காரணமென்பதை முழுதாக என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அந்தப்பாம்புகள் ஒருநாளும் என் இரு கால்களுக்கிடையில் ஊர்ந்தது இல்லை. அதைத்தவிர அப்படியான தீவிர உணர்ச்சிகள் எனக்கு தோன்றியதுமில்லை. 

இதைப்பற்றி அம்மாவிடம் கேட்ட போது, பாம்புகள் துரத்துவதாக தோன்றுவது ராகு தோஷத்துக்கு அறிகுறியாகவும் அந்தப்பாம்புகள் எம்மை கடிக்க நேர்ந்தால் தோஷம் விலகியதாகவும் அர்த்தம் கொள்ளவேண்டும் என்று விளக்கினார். திருமண நிகழ்வைக்கண்டால் மரணம் அல்லது துர்க்குறி எனவும் மரண நிகழ்வைக்கண்டால் அதிருஷ்டம் எனவும் பல் விழக்கண்டால் நெருங்கிய உறவினர் மரணமேனவும் இரத்தமெனில் உதிரக்காளி தோஷமேனவும் கனவுகளைப்பற்றிய பல அர்த்தங்களை என் பாட்டி கூறக்கேட்டிருக்கின்றேன். 

எனக்கு இவற்றில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை.தோஷங்கள் தினமும் மாறி மாறி தோன்றுவதும் கழிவதுமாக இருக்கக்கூடும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் என் கனவுகளில் பாம்புகள் தினம் தினம் தோன்றுவதும் என்னை தீண்டுவதுமாகவே இருக்கின்றன. அதனால் இன்றுவரை என்னை கனவில் துரத்தும் பாம்புகள் எனக்கு புரியாத புதுதிராகவே இருக்கின்றது. சிலவேளை நாம் தினம் வாழ்வில் சந்திக்கும் சவால்களும் பிரச்சினைகளுமே இந்தப்பாம்புகளாக மாறி என்னை கனவில் துரத்துவதாக இருக்கக்கூடும். 

இப்போது அந்தப்பாம்புகளை நான் காதலிக்க ஆரம்பித்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

No comments:

Post a Comment