-->

Sunday, May 15, 2011

தொடரும் பேருந்துப் பயணங்கள் - The Journey continues...


பிரயாணம் செய்வது எனக்கு ஒரு சுகமான அனுபவம். இதற்காகவே உயர் தரத்திற்கு பாடசாலையை குறைந்த அளவு இரண்டு மணி நேரமாவது பிரயாணம் செய்யும் அளவிற்கு தூரத்திலிருக்குமாறு தெரிவு செய்தேன். அதன் பின்பாக தினமும் நகருக்கு வெளியே அமைந்து இருந்த பள்ளிக்கும் மறு கோடியில் இருந்த தனியார் கல்வி நிலையத்துக்கும் காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரை மாறி மாறி அலைந்து கலைத்துப்போனபோது தான், என் பிரயாண ஆர்வம் என் அமைதியான (சோம்பேறித்தனமான) வாழ்க்கையில் இடி விழச்செயததும், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது இது தான் என்பதும் எனக்கு புரிந்தது. 

இருந்தாலும் பேருந்துப்பயணங்கள் எப்போதும் எனக்கு சுவாரசியமாகவே அமைகின்றன. பள்ளிக்காலத்தில் அடித்துபிடித்து பேருந்தில் ஏறி யன்னலோர இருக்கையை குறிவைத்து ஓடிப்போய் அமர்வதும் யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதும், பார்க்காத நேரங்களில் பாடப்புத்தகத்தை திறந்துபடிக்க ஆரம்பிப்பதும் என்னையறியாமல் தூங்கிப்போவதும் என்றும் மறக்காது. பாடப்புத்தகத்தை திறந்தால் மட்டும் எப்படித்தான் தூக்கம் வருமோ? அன்றைய பரீட்சைக்கான வினாக்கள் கனவில் வந்து நடனமாடும்போது தான், பேருந்தில் வைத்து தான் அன்றைய பரீட்சைக்கு தயாராக வேண்டும் என்று முடிவு செய்து வந்தது ஞாபகம் வரும். 

சிலநேரங்களில் இருக்கை கிடைக்காத போது யாரவது அருகாமையில் உள்ள நிறுத்தங்களில் இறங்குவார்களோ (நடத்துனரிடம் அவர்கள் பயணச்சீட்டு வாங்கும்போது ஒட்டுக்கேட்டு) அவர்களை குறிவைத்து கால் கடுக்க நிற்போம். ஆனால் அவர்களைத்தவிர பேருந்தில் மற்றவர்கள் அனைவரும் இடையிடையே இறங்க, அந்த இருக்கைகளை நோக்கி நகர்ந்தால் இவ்வளவு நேரம் காவல் காத்த இருக்கையை இழக்க நேரிடும் என இறுக்கமாக அதையே பிடித்து நிற்க, சரியாக அந்த குறிப்பிட்ட நபர் இறங்கும் நிறுத்தத்திலோ அதற்கு சிறிது முன்பாகவோ யாராவது கர்ப்பிணிப்பெண் பேருந்துக்குள் வர அந்த இருக்கையையும் தானம் செய்து விட்டு இழவு காத்த கிளியாக நின்று கொண்டிருந்திருக்கிறோம். 

இந்த வருடம் கோடை விடுமுறைக்காக எனது சொந்த ஊரான பதுள்ளைக்கு(Badulla, Sri Lanka) சென்றிருந்தேன். பதுளை நகரிலிருந்து எமது கிராமத்திற்கு செல்வதற்காக சனம் நிரம்பிய ஒரு பேருந்தில் எல்லோரும் ஏறிக்கொண்டோம். அதிருஷ்டவசமாக எனது அக்காவிற்கும் அவரது அருகிலேயே எனக்கும் அவரது கைக்குழந்தையின் உபயத்தால் இருக்கைகள் காலியாகக்கிடைத்தது. 

எமது பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியும் அவரது இள வயது மகளும் இருக்கை கிடைக்காததால் நின்று கொண்டு பயணித்தனர். அவர்களின் முகத்தை பார்க்கும்போதே அவர்கள் யாழ்ப்பாணம் அல்லது வடகிழக்கைச்செர்ந்தவர்கள் என்று தெரிந்தது. எனக்கு வடக்கத்தையர்களைப் பற்றி என்றுமே நல்லபிப்பிராயம் இருந்தது இல்லை. ஏனெனில் அவர்கள் மலையகத்தவரான எங்களை பெரிதாக மதிப்பது கிடையாது. அவர்கள் பேசும் சுத்தமான தமிழைப்பற்றி அவர்களுக்கு உயர்வான எண்ணமும், சிறிது கர்வமும் இருந்தது. மலையகத்தோர் பெரும்பாலும் தென்னிந்திய கிராமங்களுக்கே உரித்தான சொற்பிரயோகங்கலான "வந்தீக, போனீங்க, அப்புடியா, அவுங்க, இவுங்க" என்ற சிறிது கொச்சையான தமிழை பேசுவதையிட்டு வடக்கத்தியர் பெரும்பாலும் ஏளனமாக பார்ப்பார்கள் . இதனாலேயே அவர்கள் எம்மை 'தோட்டக்காட்டான்' மற்றும் 'கள்ளத்தோணி' எனவும் (இந்திய வம்சாவளியான மலையகத்தோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் வந்ததாகவே இன்னும் கருதப்படுகின்றனர்) நாங்கள் பதிலுக்கு அவர்களை 'பனங்கொட்டை' என கிண்டல் செய்வதும் வழமை.

வழி நெடுக அந்த இள வயதுப்பெண் சனக்கூட்டதைக்குறித்து அலுத்துக்கொள்வதும் அலட்டலான கருத்து வெளியிடுவதுமாக இருந்தார். எக்கேடும் கெட்டுப்போகட்டும் எனக்கு என்ன என்ற எண்ணத்துடன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தேன். திடீரென எனது அக்காவின் குழந்தை தண்ணீர் கேட்டு அழத்தொடங்கியது. கையில் வைத்திருந்த போத்தல் காலியாக இருந்ததைக் கண்டு சிறு குழந்தையை தேற்ற வழி தெரியாமல் அக்கா பரிதாபமாக விழித்தார். 

உடனே அந்த இள வயதுப்பெண்ணின் அம்மா நின்று கொண்டிருந்தாலும் அந்த சனக்கூட்டத்திலும் அவரது பையைத்தேடி, பைக்குள் கை விட்டுத்துலாவி ஒரு வழியாக ஒரு தண்ணீர்ப்போத்தலை கண்டு பிடித்து "பிள்ள, பாவம் அழுகுறா. முதல்ல இந்த தண்ணியக் குடிக்கக் குடுங்கோ" என்றவாறு என் அக்காவிடம் அதை நீட்டினார். எனக்கு பொட்டில் அறைந்தது போலிருந்தது. என் துவேஷ உணர்ச்சிக்கு செரியான சூடு போட்டது அவரின் அன்பும் இரக்க மனப்பான்மையும். அன்புக்கு இனம் மொழி மத பேதங்கலில்லை என்றது அப்போது தான் எனக்கு உறைத்தது.

வெட்கித்தலை குனிந்து தண்ணீர்ப்போத்தலை திருப்பிக்கொடுத்த போது பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுடனான அவர்களின் சம்பாஷணை என் காதில் விழுந்தது. 

"பசறைக்கா அம்மா போறீங்க?" (Are you going to Passara?) பின் இருக்கைப் பெண். 

"ஓம், திருகோணமலையில இருந்து நேர வாரம் பெருநாளைக்கெண்டு" (Yea, we are coming from Trincomalee for the festival)

"ஐயோ, அப்பவே சொல்லியிருக்கக்கூடாதா? களைச்சுப்போய் வந்துருப்பீங்க. நாங்க உங்களுக்கு இடத்த குடுத்துட்டு நின்னுருப்போமே.வாங்க. நீங்க உட்காருங்க. நாங்க நிக்குறோம்" (Gosh, why didn't you tell this earlier? You must be feeling tired. You sit here) என்றவாறு பின் இருக்கைப்பெண்ணும் அவருடன் கூட வந்த இருவரும் எழும்பி அந்த நடுத்தர வயதுப்பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் இருக்கையை கொடுத்தனர். எனக்கு மனதுக்குள் யாரோ பூமாரி போழிந்ததனர். விருந்தோம்பலிலும் அன்பிலும் மலையகத்தாரும் சளைத்தவர்கள் இல்லை என்ற பூரிப்புடன் பிரயாணத்தை தொடர்ந்தேன்.வேறு ஒரு நாள் மாக்கந்த என்னும் தோட்டத்தில்(estate) இல் அமைந்திருந்த மாமியின் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்துக்கு பண்டாரவளையில் எனது அம்மா மற்றும் சில உறவினர்களுடன் காத்து நின்றேன். ஒரு மணித்தியாலத்துக்கு ஒன்று எனும் விகிதத்திலேயே அந்த ஊர் பேருந்துகள் செல்ல, அதற்காக காத்துக்கிடந்த பயணிகளோ இருநூறிற்கு அதிகம் இருந்தனர். அன்றைய நாளுக்கான அந்த வழியே செல்லும் கடைசிப்பெருந்து அது தான் என்பதால் அவ்வளவு பேரின் மனத்திலும் எப்படியாவது அந்தப்பேருந்துக்குள் தொற்றிக்கொள்வது தான் குறிக்கோளாக இருந்தது. நானும் எனது அக்காவும்(சிறிது துணிந்தவர்கள் நாம் இருவரும் தான் என்பதால்) பேருந்தில் முன்பாக ஏறி மற்றவர்களுக்கும் சேர்த்து இடம் பிடிப்பது என்று முடிவாயிற்று. இதற்காக வரும் வழியிலேயே அந்த பேருந்தை மடக்குவது என்ற தீர்மானத்துடன் சிறிது முன்னோக்கி சென்று நின்று கொண்டிருந்தோம். 

ஒருவழியாக பேருந்து வந்து சேர்ந்தது. சுமார் பதினைந்து பேர் மட்டும் பிரயாணம் செய்யக்கூடிய ஒரு வாசல் மட்டும் கொண்ட மிகச்சிறிய பேருந்து அது. ரஜினி படத்திற்கான முதல் நாள் காட்சிக்காக சீட்டு கொடுக்குமிடத்தில்(ticket counter) போராடுவது போல், காத்து கொண்டிருந்த இருநூற்றிச்சொச்சம் பேரும் பேருந்தை புடை சூழ்ந்து ஒன்றாக ஏற முயற்சித்தனர். 

ஒரு வழியாக என் குடும்பத்தவர் அனைவரும் ஏறிவிட, என் பேரை கூப்பிட்டு நான் எங்கே என்று அவர்கள் தேட முயற்சி செய்த போது தான், இடம் பிடிப்பதற்கு சென்ற நான் சனக்கூட்டத்தை கண்டு பயந்து பேருந்துக்கு வெளியே வாய் பிளந்து நின்றிருந்ததை உணர்ந்தேன். என் தோல்வியை ஒரு அசட்டுசிரிப்பால் மறைத்துக்கொண்டே பேருந்தில் தொற்றிக்கொண்டேன். 

பதினைந்து பேரே மொத்தமாக பயணம் செய்யக்கூடிய அந்தப்பேருந்தில் கிட்டத்தட்ட அறுபது பேர் நிரம்பியிருந்தனர். நடத்துனர் இன்னும் சிலரை அக்கூட்டத்துக்குள் திணித்துவிடும் முயற்சியில் கூவிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து இடம் போதாதென்ற கூச்சல்கள் அதிகரிக்கவே, நடத்துனர் பின்னால் வந்து பயணிகளை அடுக்கத்தொடங்கினார். நான் அடுக்கியதாக குறிப்பிட்டதன் காரணம் நாம் பொட்டலம் கட்டும் போதோ பெட்டிகளில் பொருட்களை அடுக்கும்போதோ இடம் போதாத போது உள்ளே இருப்பவற்றை திசைக்கொன்றாக திருப்பித் திணித்து இடம் உருவாக்க முயற்சி செய்வோம் அல்லவா, அதே போல் தான் எங்களை நடத்துனர் ஒவ்வொரு திசையில் திருப்பி பேருந்தில் அடுக்கினார். சிறுவர்களை பெரியவர்களின் கால்களின் மேலும் பெண்களை அவர்களது கணவன்மாரின் மடியிலும் அமர வைத்தார். பல பேர் காலையில் செய்ய மறந்த சூரிய நமஸ்காரத்தை நின்ற நிலையில் பேருந்துக்குள்ளே செய்து கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எனக்குப் பின்னாலிருந்த பெண்மணி என் முதுகில் இடித்து "என் பிள்ளையின் தலை, தலை" என்று அலறினார். நான் சனக்கூட்டத்தில் தெரியாமல் தண்ணீர் போத்தல் மூடிக்கு பதிலாக அவர் பிள்ளையின் தலையை திருகி கையில் எடுத்து விட்டேனோ என்ற சந்தேகத்துடன் குனிந்து பார்த்தபோது, அவரின் மகன் என் கால் மேல் நின்று தலையை தொங்க விட்டவாறு தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர் அலறியது அவர் மகன் தூங்கி விழும்போது கழுத்து ஒடிந்து தலை தெறித்து தனியே விழுந்து விடாமல் இருக்க நான் அவனின் தலையை தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற கேட்டுக்கொள்ளவே. 

நான் மிரட்டலான கோரிக்கைக்கு பயந்து தலையை பிடித்துக்கொள்ள பின்னாலிருந்த அவர் திருப்தியுடன் என் முதுகில் சாய்ந்தவாறு நின்றுகொண்டே தூங்கிப்போனார். வரும் நிறுத்தங்களிலெல்லாம் நடத்துனர் பின்னால் இடம் இருக்கின்றது காலியான இருக்கைகளுடன் என்ற பொய்யை உண்மை போல் கூவி பயணிகளை ஏமாற்றி அவர்களை அந்த பேருந்துக்குள் திணித்துக்கொண்டு வந்தார். நிச்சயமாக ஓட்டுனரின் மடியில் இரண்டு கிழவிகளையாவது உட்கார வைத்திருப்பார். 

ஒரு முழுக்குடும்பமே தூங்குவதற்கு உறுதுணையாக இருந்த திருப்தியுடன் நான் நின்று கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment