-->

Friday, January 24, 2014

சும்மா இருப்பது எப்படி?



ஹாய் ஜனங்களே, எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆள காணோம்னு என்ன தேடுணீங்களா? இந்த வலைப்பூவ வாசிக்கறதே மொத்தமா ஒரு நாலைஞ்சு பேரு தான். இதுல இந்த காட்டுபூச்சி பண்ணுற அலப்பறைய பாரேன் அப்படிங்கற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது. ஓகே, மூடிட்டேன்.

                                             
புது வருஷமும் இரண்டாம் உலக பிரியாணியும்

ரொம்ப நாளா வெட்டியா இருந்தாலும் முழுசா வெட்டியா இருக்கறது தான் நமக்கு புடிக்கும். அதனால புதுப்படம் எதுவுமே பார்க்கல. நேத்து கடைத்தெருப்பக்கம் தெரியாத்தனமா போனேனா.. ஏன் போனேன் அப்புடிங்கறது வேற கதை(அதையும் நான் சொல்லியே ஆகுவேன், பாஸ் கேளுங்களேன், கேளுங்களேன்).


திடீர்னு ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்து தான் ஒரு நேர்முக தேர்வுக்கு வர சொல்லி அமெரிக்கால கூப்புட்டாக.. அப்போ தான் நம்ம கிட்ட ஒழுங்கான சப்பாத்து இருக்கா கைப்பை இருக்கானு எல்லாம் தேடிப்பார்த்தேன். வழக்கம் போல எல்லாமே ஒவ்வொரு பக்கம் பிஞ்சி உசுரா எடுத்துச்சு. வேலைக்கும் நமக்கும் இருக்க ராசி தான் உலக பேமஸ் ஆச்சே. என் நண்பனுங்க எப்போ "தொல்லை பேசி" எடுத்தாலும் கேட்கற ஒரே கேள்வி "இன்னுமா நீ வெட்டியா இருக்க?".. பத்தாததுக்கு "உன்ன பெத்தவங்க ரொம்ப நல்லவங்கடா உனக்கு இந்த வயசுலயும் தண்டச்சோறு போடுறாங்க" இப்படி சில பல பிட்டுங்கள போட்டு கடுப்பேத்துவானுங்க. இந்த நாற வாய்ங்களுக்காகவாவது நாம வேலைக்கு போகனும் அப்படினு ஒரு நல்ல முகூர்த்தத்துல எடுத்த முடிவின் பலன் தான் இந்த நேர்முக தேர்வு அழைப்பு.


அந்த பிஞ்சு போன சாப்பாத்துக்கு பங்ச்சர் ஓட்டலாம்னு போனேனா.. அப்போ காத்து நிக்குற நேரம் கொஞ்சம் ஜலபுல ஜங்ஸ் டிவிடி எதாச்சும் தேடலாம்னு பக்கத்துல இருந்த டிவிடி கடைக்குள்ள நோழைஞ்சேன்.அப்போ தான் சனியன் சகடை நம்ம தோள் மேல ஏறி நின்னு ஒலக மகா காவியங்களான இரண்டாம் உலகம் & பிரியாணிய கை காட்டுனிச்சு, சரி என்னுயிர் தோழன் பாலா இந்த இரண்டு படங்களையும் பார்த்து விட்டு ஆஹா ஓஹோன்னு கொடுத்த பில்டப் என்ன நம்பி வாங்குடா காட்டுபூச்சினு தூண்டுனிச்சு (காட்டுபூச்சி : ரெண்டாம் உலகம் படு மொக்கைனு சொல்றாங்களேடா 
பாலா : அதெல்லாம் செல்வா மேல உள்ள கடுப்பு , ரசனை கெட்டவனுங்க ஒருத்தன் அவன் காதலுக்காக எவ்ளோ தூரம் போவான் அப்படிங்கறது தான் கதை. கிராஃபிக்ஸ் லாம் செம்மையா இருக்கு. நீ பார்க்காம கருத்து சொல்லாத. பார்த்துட்டு சொல்லேன்.
காட்டுபூச்சி : பிரியாணிய எப்படிடா பார்க்க போற. கார்த்தி படம். ஆனாலும் உனக்கு மனதைரியம் ஜாஸ்தி.
பாலா : நான் வெங்கட் பிரபுக்காக பார்க்க போறேன். He will never disappoint me. அதுலயும் "தல" ஓட guest appearance இருக்காம்னு ஊர்ல பேசிக்குறாங்க. அதுக்காக போயே தீருவேன்).



மொதல்ல பிரியாணிய மொக்கலாம்னு உட்கார்ந்தேனா.. மொத ஒரு மணித்தியாலமும் கார்த்தி ஃபிகர் மடிப்பது எப்படி, அதுவும் அடுத்தவன் ஃபிகர ஆட்டைய போடுவது எப்படினு எடுத்த பாடத்துலயே ஓடுனிச்சு. எப்படா படத்த்த போடுவீங்கனு உள்மனசு கதருனப்ப நம்மை காக்க வந்த க்ருஷ்ண பரமாத்மா மாதிரி மாண்டி தாக்கர் வந்து நின்னுச்சு. என்னா ஃபிகருடா.... இந்த புள்ளைய ஹன்ஸிகா ஆன்டீக்கு பதிலா  போட்டுருந்தா படம் முழுக்க குளிர்ச்சியா இருந்துருக்குமே. கொஞ்சமா வேகம் எடுத்த படம் அக்கா செண்டிமென்ட் காட்சிகளால மறுபடி படுத்திருச்சு. அதுலயும் என்ன விட்டுட்டு தண்ணி அடிக்க போவியா மச்சி ரேன்ஜ்ல எல்லாரும் கார்ல குந்திக்கிட்டு நண்பன்னா என்ன தெரியுமானு ஆளாளுக்கு விட்ட பன்ச்ல, முடியல மக்கா..


இதுவே இப்படினா இரண்டாம் உலகம் எப்படி இருக்குமோனு ஒரே நாளுல நாம ரொம்ப தான் ரிஸ்க் எடுக்குறோமோனு உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலோடதான் பார்க்க தொடங்குனேன். ஆனா அனுஷ்கா-ஆர்யா (ரம்யா-மது) இந்த உலக காதல் நெஜமா நல்லாவே இருந்துச்சு. அதிலும் என் காதல் தீ பாடல் அருமை. ரெண்டாம் ஒலக காதல்(வர்ணா-மறவன்) மொக்கைத்தனம் அதிகமா லூசுத்தனம் அதிகமான்னு சொல்லமுடியாம பின்னி பிணைஞ்சு ஒரு கலவையா இருந்தது. அதுல புடிச்ச ஒரே விஷயம் வெள்ளைக்காரனுங்க(வேற்றுகிரக வாசிங்க) பேசுன தமிழ். கண்கலங்கிட்டேனப்பூ.. (எல்லாரும் அந்த ராஜாவ குப்ப ராஜா  குப்ப ராஜானு கூப்டாகளே, அது அவரு படிச்சு எடுத்த பட்டமா? #டவுட்டு). படத்தோட ரெண்டாம் பாதி பட்ட பகலுல போற ஹிந்தி ஸீரியல் மாதிரி ஒரே இழுவை. எப்படா படத்த முடிப்பீங்கனு கதறிக்கிட்டு இருக்கும் போதே ஆர்யா மூணாவதா ஒரு உலகத்துக்குள்ள போனாரு. மறுபடியுமா? சேத்தேன்னு அலறிட்டே டீவீ அ நிறுத்திட்டேன். இந்த ரெண்டு படத்தையும் எனக்கு recommend செஞ்ச என் அன்பு நண்பன தான் இப்போ தேடிட்டு இருக்கேன். பழி வாங்கிட்டான் பக்கி.

புது வருசத்துல "வீரம்" தியேட்டர்க்கே போய் ரகளையா விசில் அடிச்சு படம் பார்த்திருந்தாலும் அத பத்தி எழுதாததுக்கு ஒரே காரணம் காட்டுபூச்சி ஒரு தீவிரமான "தல" பக்தன் என்பது தான். அப்புறம் காட்டுபூச்சி நடுநிலமை தவறிட்டான் அப்டீன்னு சிலம்போட ஓடி வாரவங்களுக்கு பஞ்சாயத்து பண்ண என்னால ஆகாது.




புதுசா ஒரு தொடர்கதை

இப்போ உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி. தெனமும் இரவானதும் தண்ணி அடிச்ச மாதிரி என் நண்பர்களை ஒரே கேள்விய திரும்ப திரும்ப கேட்டு அவங்களை டார்ச்சர் பன்னுனதன் விளைவு.. "மச்சி நீ வெட்டியாவே இருக்கதால தான் இப்படிலாம் கேள்வி கேட்குற. எதாச்சும் உருப்படியா எழுதாப்பாரு(எங்கள விட்டுரு..) இப்படி என்ன உசுப்பேத்துனதன் விளைவு...
நான் புதுசா ஒரு தொடர்கதை(?) எழுதலாம்னு முடிவெடுத்து இருக்கேன். அஜால் குஜாலான ஒரு அமானுஷ்ய கதை. நல்லா இருக்க இல்லையானு தொடர்ந்து படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. அதுக்குள்ள எனக்கு வேலை கிடைச்சா இந்த கதை பரணுக்குள்ள போடப்படும். இந்த நல்ல விஷயம் நடக்கனும்கறதுக்காகவாவது எனக்கு சீக்கிரமா ஒரு வேலை கிடைக்கனும்னு pray பண்ணுங்க மக்களே. 


அப்புறம் இந்த தலைப்புக்கும் நா எழுதுன எதுக்குமே சம்பந்தமே இல்லைனு நெனைச்சீங்கனா ஸாரி பாஸ் , நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதுன பதிவுல(வேலை தேடும் படலமும் அனிதாவின் காதல்களும்) சொன்ன மாதிரி இந்த பதிவ எழுதி முடிச்சிட்டேன். அடிக்க கல்லு தேடாதீங்க. நான் ஒடிட்டேன் அப்போவே.



கொசுறு:


நாம எழுதி(?) வேற ரொம்ப நாள் ஆச்சா, இவ்ளோ நாளா எப்படி தமிழில் "தட்டச்சு" செய்தேன் என்பதும் மறந்தே போச்சு. ப்லோக் இல் இருக்குற ஆனாவ (அ) அமுக்கி விட்டு என்னென்னவோ செய்ஞ்சு பார்த்தேன். ஒன்னும் வேலைக்கு ஆகல. கூகுள் ஆண்டவரிடம் டைப்பீ கேட்ட போது யாஹூ தெய்வமே கைகொடுத்தது. அப்போ இவ்ளோ நாள் வேலை செய்ஞ்ச கூகுள் மென்பொருள் எங்க போச்சு? கெணற தான் லவுட்டுறீங்க, கூகுள்கிட்டயுமாடா உங்க நாற வேல?


Monday, July 29, 2013

தோற்கின்றேன் தினம்



திருமணத்தில் தான் காதல் தோற்கின்றதாம்.
ஆமாம் - உன் திருமணத்தில் 
என் காதல்.

உன்னை இழந்ததை விட
உன்னால் இழந்தவை தந்த 
வலி அதிகம்.

காதல், 
தியாகத்தின் மகத்துவம் 
எல்லாம் அடிபட்டுப்போகின்றன
காதல் தோல்வியில்.

சேர்ந்து வாழ வேண்டும் 
என்ற ஆசை 
காதல் அல்ல, சுயநலமெனில்
எது தான் காதல்? 


இத்தனை தோல்விக்கு அப்புறமும் 
புரியவில்லை - காதலின் 
வரைவிலக்கணம் 


மூர்க்கமாய் மாறும் பச்சாதாபம் 
ஒரு நொடியில் - கண்ணீராய் 
வெடித்துச்சிதறும் 

குடம் குடமாய் வடித்தபின்னும் 
கண்ணீர் - இன்னும் மிச்சமிருக்கு 
இனிவரும் 
தோல்விக்கும் சேர்த்து

காதலுக்கும் மரணத்துக்குமான 
இடைவெளியில் 
தோற்கிறேன் தினம்..


(பயப்படாதீங்க மகாஜனங்களே... இது ஒரு மொக்கையான கவிதை எப்படி இருக்கும்கறதுக்கு ஒரு சின்ன sample..எப்படி? மரண மொக்கை தானே... இன்னிக்கு சந்தோஷமா தூங்குவேன்.... காட்டுபூச்சிக்கு கவிதை வந்துருச்சு டோய்.....)




Sunday, January 1, 2012

rockstar - ராக்ஸ்டார் (ராக் இசைக்கலைஞனின் காதல் பயணம்)



இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த எமக்கு அந்த இசைக்கு பின்னால் இருக்கும் இசைக்கலைஞர்களின் வலியையோ பிரபலமாவதற்காக அவர்கள் கொடுக்கும் விலையையோ எண்ணிப் பார்க்க தோன்றுவதில்லை. இது இசைக்கலைஞர்களுக்கு என்று இல்லை, பிரபலங்கள் அனைவருக்கும் பொதுவானது. நாங்களும் இவனுக்கு எங்கயோ மச்சம்யா என்பதுடனோ கிசுகிசுக்களை படித்து மறந்து போவதை போலவோ கடந்தும் போகின்றோம். 


இது ஒரு ராக் இசைக்கலைஞனின் வாழ்க்கைப்பயணம். இசைப்பயணம் என்பதை விட இசைப்போராளியின் காதல் பயணம். or vise verse . ஒரு சாதாரண இசைக்கலைஞன் எப்படி ஒரு இசை போராளியாக மாறினான், மாபெரும் ராக் இசை பிரபலமாக மாறுவதற்கு என்ன விலை கொடுத்தான், அவனது குறிக்கோளை அடைய அவன் தெரிவு செய்த வழி எவ்வாறு அவன் வாழ்க்கையையே புரட்டி போட்டது, இது தான் ராக் ஸ்டார் திரைப்படத்தின் கதை.






ஜனார்த்தன்(ஜோர்டன் என்று பின்பு அழைக்கப்படும்), ஒரு சாதாரண கல்லூரி மாணவன். jim morrison ஐ போன்று ஒரு பெரிய இசைக்கலைஞனாக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பாடகன், கிடார் இசைக்கலைஞன், மற்ற ராக் இசைக்கலைஞர்களை போல் தலைவிரி கோலமாக கோணங்கித்தனமான ஆடைகளுடன் வெறித்தனமான attitude உடன் அலைபவன் அல்ல இந்த ஜனார்த்தன். ஒரு சாமானியன். 


சிறந்த இசைக்கலைஞனுக்கு இருக்க வேண்டிய எல்லா திறமைகளும் இருந்தும் தன்னால் ஏன் ஒரு பிரபலமாக உருவாக முடியவில்லை என்ற கேள்விக்கு அவனுக்கு காதல் வலி தான் ஒரு சிறந்த கலைஞனை உருவாக்கும் என்று போதிக்கப்படுகிறது. இதற்காக இதயத்தை உடைக்கும் இயந்திரம் என்று நண்பர்களால் வர்ணிக்கப்படும் காஷ்மீரிய அழகி, அவனுடன் கூடப்படிக்கும் ஹீர் மீது காதல் கொள்ள(?) முயற்சிக்கிறான். இவளின் புறக்கணிப்பு இவனில் காதல் வலியாக மாறி இசைக்கலைஞனுக்கான அடையாளத்தை தோற்றுவிக்கும் என்று நம்புகிறான். ஹீர் அவன் காதலை ஏற்றாளா அல்லது அவன் விரும்பிய காதல் வலியை கொடுத்தாளா, இந்த விளையாட்டுத்தனமான காதல் முயற்சி எத்தகைய மாற்றங்களை அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தியது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


ராக் ஸ்டார், ரன்பீர் கபூர், நர்கிஸ், அதிதி ராவ், ஷம்மி கபூர் நடிப்பிலும் இம்தியாஸ் அலியின் இயக்கத்திலும் உருவானது. ஜோர்டன் என்ற ஜனர்தனுக்கான தெரிவாக ரன்பீர் கபூர் கனகச்சிதம். அப்பாவி ஜனார்தனாக ஹீரிடம் just like that காதலை சொல்வதாகட்டும் காதல் தோல்வியை அனுபவிப்பதாக சமோசா கேட்பதாகட்டும், வெறித்த கண்களுடன் தர்காவில் பாடுவதாகட்டும், ஜோர்டனாக அலட்சியமாக ரசிகர்களுக்கு நாடு விரலை தூக்கிக் காட்டுவதாகட்டும், காதலியை மோகிக்கும் காட்சிகளிலாகட்டும் மனிதர் அட்டகாசபடுத்துகிறார். 




உலகமே போற்றும் ஒரு மாபெரும் இசைக்கலைஞனை உருவாக்கப்போகும், கல்லூரியே உபாசிக்கும் ஒரு தேவதை எப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்கிறார் மாடல் அழகி நர்கிஸ். புகைப்படங்களில் சாதா அழகியாக கூகுளில் முக்கால் நிர்வாணத்துடனேயே இருக்கும் நர்கிஸ் இந்த பாத்திரத்துக்கு எப்படி பொருந்துவார் என்று நினைத்தவர்களுக்கு இத்திரைப்படத்தில் நர்கிசின் காஷ்மீரிய அழகி பாத்திரம், அவரின் நடிப்பு ஆனந்த அதிர்ச்சி தான். சில கோணங்களில் கத்ரீனா கைப் ஐ ஞாபகப்படுத்தினாலும் குழந்தைத்தனமான குறும்புகளிலும் உதட்டு அசைவுகளிலும் மனதை அள்ளுகிறார். 






காலம் சென்ற ஷம்மி கபூர் சில காட்சிகளில் தோன்றுகிறார். நாயகனின் negetive publicity ஐயும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அந்த கோமாளி வில்லன் சிரிக்க வைக்கிறார், சில நேரம் எரிச்சலையும் வரவழைக்கிறார். 


உண்மையில் ராக் ஸ்டார் திரைப்படத்தை பார்க்க ஆஸ்கார் நாயகனின் இசை என்ற ஒரே காரணமே என்னை தூண்டியது. பதினான்கு பாடல்கள் இத்திரைப்படத்தில் இருந்தாலும் பெரும்பான்மையான பாடல்கள் படத்தில் துருத்திக்கொண்டு தெரியாமல் சாமர்த்தியமாக காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கின்றன. இந்திய ராக் இலிருந்து கிழக்காசிய, ஹங்கேரிய இசை வரை கலந்து இசை விருந்து படைத்திருக்கிறார் இசைப்புயல். சத்தா ஹக்(Sadda Haq ), நாதான் பரிந்தே(Nadaan Parinde), ஜொஹ் பிஹி மெஹ்(Jo Bhi Main) என்பவை ராக் இசைபிரியர்களுக்கனவை. தும் ஹோ(Tum Ho) , ஆர் ஹோ(Aur Ho) என்பவை மனதை கனக்கவைக்கும். இவற்றில் எனக்கு பிரத்தியோகமாக மிகப்பிடித்தது ஆர் ஹோ(Aur Ho) மற்றும் ஜுகல்பந்தியாக  ஒலிக்கும் The Dichotomy of Fame . 




வேறொருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் காதலன் திருமண மருதாணி இட்டு விட நாயகி அவனை கட்டியணைக்கக் கோரும் காட்சியும் திருமண ஆடைகளுடன் காதலனுக்கு அழகு காட்டி விட்டு நீ என்னை காதலிக்க ஆரம்பித்து விடவில்லையே என்று கிண்டலாக நாயகன் கேட்கும்போது கண்களில் தோன்றும் ஏக்கத்தை மறைத்துக்கொண்டு இப்போதே ஓடிப்போய் விடுவோமா என்று நாயகியும் குறும்பாகவே கேட்பதும் ரசனையான காட்சிகள். 


இத்திரைப்படத்தில் சிறு குறைகளும் இல்லாமலில்லை. நான்-லிநீயராக(non-linear) திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இந்தக்கதைக்கு  பொருத்தமாக  இருந்தாலும் சிலநேரங்களில் திரைக்கதையில் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சில காட்சிகள் மறுபடி மறுபடி தொன்றுவதைப்போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றன. இடைவேளைக்கு பிறகான காட்சிகளுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 


காதலிக்காக எதையும் செய்யக்கூடியவராக அவளின் சின்னச்சின்ன ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற பாடுபடும், காதலிக்கு திருமணம் ஆகிய பிறகும் அவரை அடைய துடிக்கும் நாயகன், அவர் திருமணத்துக்கு முன்பான காட்சியில் என்னை கடத்திக்கொண்டு போய் விடு என்று காதலியே கேட்கும்போதும் அதை புறக்கணிப்பதும் ஏனோ? 

திரைப்படத்தின் போஸ்டர்கள் என்னை பெரிதாகக்கவரவில்லை. வெளி அலங்காரங்களிலேயே மயங்கிவிடும் சாதாரணனின் மனநிலையை தாண்டி நான் இன்னும் வெளி வராததும் இதற்கு காரணமாக இருக்கலாம். காதலிக்கு கல்யாணம் ஆன பின்பும் அவளை நேசிப்பதும் அடையத்துடிப்பதும் இந்திய கலாச்சாரத்திற்கு இழுக்கு என்று நினைக்கும் கலாசார காவலர்கள் இத்திரைப்படத்தை தவிர்க்கலாம். 













பிரபலமாக இருப்பதால் எதையெல்லாம் ஒருவன் இழக்க நேரிடும் என்பதையும் ஒரு கட்டத்திற்கு மேல் நாமே நினைத்தாலும் பிரபலம் என்ற போர்வையை விட்டு வெளியே வர முடியாது என்பதையும் ஜோர்டன் பாத்திரத்தின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். 


ராக் ஸ்டார் என்று பெயரிடப்பட்ட போதும் ஒரு ராக் இசைக்கலைஞனின் காதல் வாழ்க்கையுடனான காலகட்டத்தையும் அதன் மூலமான வலியையும் மட்டுமே இயக்குனர் படமாக்கியுள்ளார். இருப்பினும் ராக் ஸ்டார் காதலிப்பவர்களையும் இளைஞர்களையும் இசை ரசிகர்களையும் கவர்வான் என்பதில் ஐயமில்லை. 


காதலில் சரியென்றும் தப்பென்றும் எதுவும் இல்லை... எல்லாவற்றிற்கும் காரணம் கற்பிக்காமல் காதலை காதலாக மட்டுமே பார்க்கக்கூடிய மனோநிலை மட்டுமே இருந்தால் இத்திரைப்படத்தை பார்க்கவும்..